Sanga Seithigal

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்


தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.

ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.

கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.

யார் இந்த கிம்-கி-டுக்?

1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.

போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.

’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.

கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.

மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.

“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”

சிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும். டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது. ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட வீடுகளில் இன்னும் கிழிக்கப்படாமல் இருக்கும் நோட்டீசை வைத்து அந்த வீட்டில் யாரும் இல்லை என்று புரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்து அவன் வீட்டினை போல் உபயோகிக்கித்து கொள்கிறான். வீட்டு உரிமையாளர் திரும்பி வரும் வரை அங்கேயே வசித்து வருகிறான். வீட்டில் ரிப்பேராகி இருக்கும் கடிகாரம்,டேப் ரிக்கார்டர் முதலியவற்றை சரி செய்து வைக்கிறான்.துணிகளை துவைப்பது,செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றும் செய்கிறான்.. எதையும் திருடுவதில்லை. ஒரு முறை ஒர் பெரிய பங்களாவினுள் நுழைகிறான். அங்கு வீட்டுச் சிறையில் இருக்கும் ஒரு பெண் இருப்பது தெரியாமல். சன் வா என்ற அந்த பெண் அவனுக்கு தெரியாமல் அவனை கவனிக்கிறாள். போனில் அவள் கணவனுடன் உரையாடுவதினை வைத்து அந்த பெண் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என்று உணருகிறான். ஒரு நாள் கணவனும் திரும்பி வருகிறான்.அந்த பெண்ணை பலவந்த படுத்துகிறான். மறுக்கும் பெண்ணை அடிக்கிறான். இதனை பார்த்த டா-சுக் 3-IRON எனப்படும் போலோ விளையாடும் பேட்டால் போலோ பந்துக்களை வைத்து அடித்து அவன் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறான்.வழக்கம்போல பல பூட்டிய வீட்டினுள் நுழைந்து இருவரும் வாழ்கிறார்கள். ஒரு டிஜிட்டல் கேமிராவால் ஒவ்வொரு வீட்டிலும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்க்ள். ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அங்கு ஒரு பெரியவர் இறந்து கிடக்கிறார். இருவரும் அவரை நல்ல முறையில் வீட்டிற்கு பக்கத்தில் அடக்கம் செய்கிறார்கள். ஒரு நாள் அந்த பெரியவரின் மகனும், மருமகளும் வீட்டிற்குள் வந்து பெரியவர் இல்லாததை அறிந்து டா-சுக்,சன் - வா இருவர் மீதும்

போலிஸில் புகார் கொடுக்கிறார்க்ள். போலிஸ் விசாரைணையில் பெரியவர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்கையில் அவர்கள் முறைபடி நல் அடக்கம் செய்ய பட்டிருப்பது அவர் மகனுக்கு வியப்பினை தருகிறது. அடாப்ஸி ரிப்போர்டில் பெரியவர் நுரையீரல் புற்று நோயில் இறந்தது தெரிகிறது. வீட்டிலும் ஒரு பொருளும் களவாடபடவில்லை என தெரிந்து பெரியவரின் மகன் டா- சுக்கினை விடுவிக்க சொல்லிட்டு போய் விடுகிறார். இதற்கிடையில் சன் - வாவின் கணவன் இன்ஸ்பெக்டரிடம் மனைவி காணவில்லை என்று முன்பு கொடுத்து இருந்த விண்ணப்பத்தினை வைத்து டா-சுன், சன் - வாவினை கடத்திக் கொண்டு போனதாக சொல்லி நம் ஹீரோவினை சிறையினுள் தள்ளுகிறார். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் கணவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இதனை செய்கிறார். கணவனுடன் வீடு திரும்பிய சன் - வா கணவனை கண்டாலே பிடிக்காமல் டா- சுக்கினை நினைத்து கொண்டே வாழ்கிறாள் எப்படியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு. சிறையில் ஹீரோ அடிக்கடி மறைந்து கொண்டு உள்ளே நுழையும் சிறைக்காவலரை கடுப்படிக்கிறான். போலீஸ் அடித்தால் கூட கூலாக ஒரு சிரிப்பு. மெடிடேஷன் மாதிரி எப்பொழுதும் மெதுவாக காலடி ஓசை இல்லாமல் நடக்க பயிற்சி எடுக்கிறான்.சிறையறையில் நுழையும் போலீசிற்கு தெரியாதபடி பின்னாலும் நின்றும் சுவற்றில் தொற்றியும் வெறுப்பேற்றுகிறான். மேலும் தான் சிறையறையிலிருந்து தப்பிவிட்டதைப்போல் மறைந்தவாறு அடிக்கடி போக்குகாட்டி அவரை அதிர்ச்சியடையச் செய்கிறான்.

இந்த அனுபவத்தைக் கொண்டு சிறையிலிருந்து வெளியே வரும் டா-சுக் நேரே சன் – வா-வுடன் வீட்டிற்குச் சென்று அவள் கணவனின் கண்களுக்கு புலப்படாமல் சன்-வாவுடன் வாழ ஆரம்பிக்கிறான். இந்த படத்தின் ஹீரோ படம் முழுவதும் பேசுவதேயில்லை. ஒரு மர்ம புன்னகை மட்டுமே. ஹீரோயினும் அவனுடன் பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பேசுவதில்லை என்று நாம் உணர்வதே இல்லை. அப்படி ஒரு நடிப்பு இருவரும். மெல்லிய இசை,ஹீரோவின் அழகு, ஹீரோயினின் பாவமான முகம், ஹீரோவின் சிரிப்பு என எல்லாமே அழகு. இயக்குனர் கிம்-கி-டுக் திரைப்படங்கள் பெரும்பான்மையாக முக்கிய கதாபாத்திரங்கள் பேசமாட்டார்கள்!

3IRON WATCH FREE ONLINE MOVIE LINK

http://www.veoh.com/watch/v323388CcFW9d5T?h1=3-Iron+%28English+Subs%29

ஒரு கதையாகச் சொல்வதற்கு டைம் அவ்வளவு எளிதான படமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் திரைப்படமாகப் பார்க்கும்போது இந்தத் திரைப்படத்தை இதை விட எளிமையாகச் சொல்லியிருக்க முடியாதோ என்று தோன்றுகிறது.

ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவமனையிலிருந்து முகமுடி அணிந்த ஒரு பெண் வெளிவருகிறாள். வழியில் அவசரமாக ஓடும் ஓர் இளம் பெண் அவளுடன் மோதுவதால் முகமுடி அணிந்த பெண்ணின் கையிலிருக்கும் புகைப்படம்கீழே விழுந்து சிதறுகிறது. இளம் பெண் அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சரிசெய்யப் புறப்படுகிறாள். அந்த இளம்பெண் ஷெ ஹீ.

இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத்தக்கது காலம்தான். இதை ஷெ ஹீ முற்றிலும் அறிந்தவளாகவே இருக்கிறாள். ஜீ வூ-உடனான தன்னுடைய இரண்டு வருடத்துக் காதல் இந்தக் காலத்தால் மாற்றமடைந்து வருவதாக அவள் உணர்கிறாள். சந்தேகம் பிறக்கிறது. சண்டைகள் எழுகின்றன. ஏறக்குறைய பிரிவை நோக்கித் தள்ளப்படுகிறது உறவு.

தன்னுடைய காதலைக் காப்பாற்ற தானே வேறு ஒரு மனுஷியாக அவதாரம் எடுக்கத் தீர்மானிக்கிறாள் ஷெ ஹீ. ஆறு மாதம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகிறாள். தனிமையில் தவிக்கிறான் ஜீ வூ. பல பெண்களையும் சந்திக்கும் அவனால் ஷெ ஹீயை மறக்க முடியவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் முற்றிலுமாக வேறு ஒரு மனுஷியாக தோற்றத்தில் மாறி ஜீ வூ-வை மீண்டும் காதலிக்கிறாள். அந்தக் காதலில் அவள் மகிழ்ச்சியுடனிருந்தால் குழப்பமில்லாமல் ஒரு வண்ணத்தை நாம் ஷெ ஹீ மீது பூசிவிடலாம். ஆனால் அவளின் அடையாளச் சிதைவினால், தானும் அமைதி இழந்து தன்னுடைய காதலையும் சிதைக்கிறாள். கடைசிவரை இந்தக் கதாபாத்திரத்தின் தன்மை நமக்கு விளங்கவேயில்லை.

புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி, காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடிப் போகப்போவதாக முகம்மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான்.

அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ, ஷெ ஹீ எடுத்த அதே முடிவையே தானும் எடுக்கிறான். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் தானும் புதிய மனிதனாக அவதாரம் எடுக்க முடிவு செய்கிறான். புதிய முகம் கொண்ட ஜீ வூ யாராக இருக்க முடியும் என்று தெரியாமல் தவிக்கிறாள் ஷெ ஹீ. தனியாக இருக்கும் எந்த ஆணும் ஜீ வூவாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறாள். இந்தச் சமயத்தில் ஷெ ஹீக்கு ஜீ வூ தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் – ஆனால் முற்றிலுமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடுகிறான் (தான் பட்ட தவிப்பு அவளும் படட்டுமே என்று இருக்கலாம்). அவனைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் போது ஜீ வூ ஒரு டிரக்கில் அடிபட்டு இறக்கிறான்.

மனப் பிழற்சி ஏற்பட்ட நிலையில் தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டரிடம் ஜீ ஹீயின் ரத்தத்தின் கறை படிந்த கைகளோடு சென்று மன்றாடுகிறாள் ஷெ ஹீ. அந்த டாக்டரின் அறிவுரையின் பேரில் மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மீண்டும் இந்த உலகத்தைப் புதிதாகச் சந்திக்க முடிவு செய்கிறாள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெளியே வரும் அவள் மீது வேகமாக ஓடி வரும் இளம் பெண் மோதுகிறாள். இரண்டாம் முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவள் கையிலிருந்து விழுந்து சிதறுகிறது. மோதிய இளம் பெண் அந்தப் புகைப்படத்தை சரிசெய்து கொடுப்பதாகக் கூறி எடுத்துச் செல்கிறாள். எடுத்துச் செல்லும் இளம் பெண் வேறு யாருமல்ல – எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்வதற்கு முன் இருந்த ஷெ ஹீ. திரைப்படம் முடிகிறது.

இந்தக் கடைசிக் காட்சியையும் முதல் காட்சியையும் இணைத்த சாமர்த்தியம் சற்றும் எதிர்பாராதது. கவித்துவமோ அலங்காரங்களோ இல்லாமல் சென்ற இந்தத் திரைப்படம் ஏன் இப்படி முடியவேண்டும்? ஒரு விதத்தில் பார்த்தால் கடைசி காட்சியும் முதல் காட்சியும் (உண்மையில் இவை இரண்டுமே ஒரே காட்சிதான்) திரைப்படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எந்த மாற்றமும் வந்திருக்காது. அப்படி இருக்க இந்தக் காட்சியமைப்பு எதற்காக? ஷெ ஹீ-இன் சிதைவிற்கு அவளே காரணம் என்ற இயக்குநரின் கருத்தை அந்தக் குறியீடின் வாயிலாக அவர் அங்கே பதிவு செய்திருப்பதாகத்தான் நாம் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் மட்டுமே கிம் கி டுக் நம்முடன் நேரிடையாகப் பேசுகிறார்.ஒரு திறமையான இயக்குநரால் எப்படி ஒரு திரைப்படத்திற்கு கவித்தன்மையைப் புகுத்த முடியும் என்பதற்கு இது உதாரணம்.

முதல் பாதியில் சந்தேகிக்கும் ஒரு காதலியிடம் பிரிந்த காதலன் அப்பிரிவில் ஒரு ஆணுக்குரிய சபலங்களாலும் காதலியின் மேல் கொண்ட பிரேமையினாலும் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறான். அவள்மேல் கொண்ட காதலினால் பிற பெண்களைச் சந்திக்கும்போது குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அவளது பிரிவின் வலியில் துடிக்கிறான். பிற பெண்களை அணுகாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் காதலியையும் மறக்க முடியவில்லை. அவள் இருக்கிறாளா இல்லையா என்ற நிலையும் தெரியாமல் தவிக்கிறான்.

பிற்பகுதியில் காதலி தன் காதலின் மேல் கொண்ட அபாரமான பிரேமையினால் அவள் தன்னைத் தானே வருத்திக் கொள்கிறாள். ஏறக்குறைய இரண்டு விதமான ஆளுமைகளில் சிக்கித் தவிக்கிறாள். அவளின் இந்தக் குழப்பமான ஆளுமையால் காதலனை அவள் சோதனைகளுக்குட்படுத்தும் போது நமக்கு காதலன் மீது பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பகுதியில் ஜீ வூ பட்ட எல்லாத் தவிப்பையும் ஷெ ஹீ இரண்டாம் பகுதியில் அனுபவிக்கிறாள். இந்த இரண்டாம் பகுதியில் ஷெ ஹீயின் தவிப்பும் பார்ப்பவர் எல்லாம் ஜீ வூவாக இருப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் தன்னுடைய காதலைக் காக்க அவளின் போராட்டமும் அவளின் நிலையில்லா மனதின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகின்றன.

இந்தக் கதாபாத்திரங்கள் அனைவரும் சராசரியான மனிதர்களாகவும், சிதையும் மன நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட சமுகத்தின் பிரதிநிதிகளாகவும்தான் இருக்கின்றனர். மனதிற்கு பதில் முகமும் உடலுமே தனது அடையாளங்கள் என்று ஏற்றுக் கொண்ட ஒரு சமூகத்தின் பின்னடைவையும் இப்படிப்பட்ட சமூகத்தின் அவலத்தையும் கிம் கி டுக் அம்பலப்படுத்துகிறார்.

பொதுவாகவே கிம் கி டுக்-இன் திரைப்படங்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பதில்லை. பூடகத்தன்மையும், முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் தன்மையும் கொண்ட அவரின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் டைம் சற்றே எளிமையானது.

“இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும் சேர்ந்ததுதான் கடவுள்”

கொரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பௌத்த ஆலயம் இருக்கிறது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந்து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம். ஒரு முதிய பௌளத்த துறவியும் ஓர் சிறுவயது பௌத்த துறவியும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கதைத் துவங்குகிறது.

நான்கு பருவக் காலத்தின் பின்னனிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்க்காலம், இளவேனிற் காலம் என்கிற வெவ்வேறான சூழலில் ஒரே பௌளத்த ஆலயமும் ஏரியும் அதே பௌளத்த பிக்குகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது கொரியா சினிமாவான இப்படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

பின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லையை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண்டது எனலாம். அதில் பல உலக தரத்திலான விருதுகளை வென்ற கி டுக் கிம் எனும் இயக்குனர் முக்கியமானவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது.

“முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கையோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனுடன் கலந்து உறவாடுங்கள்”

படம் முழுக்க பௌத்த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதாகவும், ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேட்சங்கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடுகளின் படிமங்களாகச் சொல்லப்பட்டுருக்கிறது போல தோன்றுகிறது.

“இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம்”

மேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங்களை, தனக்கான சிந்தனைகளை ஒரு கணமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வண்மையாக சோர்வடைய செய்கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என்பது போல, படத்தில் வரக்கூடிய பௌளத்த துறவி சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பார்க்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அவன் துன்பம் விளைவித்த உயிரினங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர்கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடைகிறது. பிறகு அடுத்த பருவக் காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்துவிடுகிறான்.

“இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே, வெறுமையாக சூன்யமாக இருங்கள் என்று பௌத்தம் கூறுகிறது”

ஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பௌளத்த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்பதாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட்டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரிசிக்கும்போது, வெறுமையாக சூன்யமாக மட்டுமே உணர முடியும் என்பது போல, அவனின் உலகத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற்கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான்.

இங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பௌளத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல்கிறது. பனி வந்து மறையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும்.

புத்தர் தன் பரிசோதனையாக, மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண்ணிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர் அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, ஆகையால் அனுபவப்பூர்வமாக புத்தத்தை யாரும் வெல்ல முடியாது, ஆனால் உலகியல் தர்க்கம் சார்ந்து புத்த சிந்தனைகளை தோற்கடிக்க முடியும் அல்லது கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பின்னனியில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங்களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளியாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க்கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலுறவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந்தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூலமாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத்துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன்னைப் பற்றி அதிகமாகவும், அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் புத்தத்திற்கும் மௌன போராட்டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்றுவிட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பௌத்தத்திற்கு எதிரான வடிவமாகவே வந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிரமத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி இறந்தும் விடுகிறாள். இப்படியாகப் படம் ஒரு விரிவான தளத்தில் இயங்குகிறது.

படத்தின் காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் தமிழ் பார்வையாளர்களுக்குப் புதிய பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். மேலும் எந்த அலட்டலும், மிகைத்தன்மைகளும், போலித்தனங்களும், ஆட்டமும் பாட்டமும், குத்தாட்டமும், மசாலாக்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக பௌளத்தத் துறவிகளின் வாழ்வையும், நிலப்பரப்பு சார்ந்த ஒவ்வொரு பருவக் காலங்களையும் அழகியலோடு காட்டியிருப்பது மாற்றுச் சினிமாக்கான வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

எந்தவொரு தனிமனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் தன்னையோ தன் வாழ்க்கையையோ ஒரு படைப்பென்பது ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட படைப்புகளே பெரும்பாலும் பேசப்படும்.. ஆனால் கிம் கி டுக்கின் படங்களில் வரும் கதைமாந்தர்கள் பெரும்பாலும் எந்தவகையான ஒப்பீட்டு அளவிலும் நாம் வாழும் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே இருக்க மாட்டார்கள்.. இருப்பினும் அவரது படைப்புகள் நம்மை அளவுகடந்து உருக்குவதும், உரு மாற்றம் செய்வதும் எப்படி என்கின்ற சூட்சமத்தை நாம் The Bow திரைப்படத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்..

நமக்கு மிகவும் பழக்கமான ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் நமக்கு ஒருவித சோர்வை கொடுக்கும்.. அதுபோல நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு விசயத்தையோ அல்லது சம்பவத்தையோ நாம் நோக்கிய அதே பார்வை நோக்கோடு அணுகும் திரைப்படங்கள் கவனம் பெற்றாலும் அதிக அளவில் ஈர்க்காது.. ஆனால் அதே பரிச்சயமில்லாத விசயத்தையோ, சம்பவத்தையோ ஒரு திரைப்படம் வேறொரு பார்வையில் ஆழமாக நம் முன் விரித்து வைத்தால், அவை நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் வெகுநாட்கள் ஆகியும் அடங்காது.. பெரும்பாலும் இதைத்தான் பெரும்பாலான கிம் கியின் படங்கள் செய்கின்றன..

கதை மாந்தர்கள் நம்மில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு தெரிந்தாலும், அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் எல்லாம், நாம் ஓரிரு நிமிடங்களில் தீர்ப்பு கூறி நம் வாழ்க்கையில் நாம் எளிதாக கடந்து சென்ற சம்பவங்களாக இருக்கும். நம்மால் ஜீரணிக்க முடியாத, நாம் அருவறுத்து ஒதுக்குகின்ற அது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி இவர் எடுக்கும் திரைப்படங்கள், நமக்குள் புதுவிதமான சிக்கலான சிந்தனை கோணங்களைக் கொடுப்பதோடு மட்டுமன்றி, தீர்ப்புக் கூறும் மனநிலையில் நாம் இன்னும் அடைய வேண்டிய பக்குவங்கள் அதிகம் என்பதையும் அவை சுட்டிக் காட்டும்.. இந்த வரிகளையே அடிப்படையாகக் கொண்டு, நானோ கிம்கியின் படங்களோ குற்றத்தையும், குற்றவாளிகளின் செயல்களையும் ஆதரிக்கிறோம் என்பது போல் எண்ணிக் கொள்ள வேண்டாம்.. குற்றவாளிகளின் செயல்களில் இருக்கும் ஒருவிதமான பின்னோக்கு மனவியலையும் உணரத் தலைப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இவரது திரைப்படங்களின் நோக்கம்..

The Bowவின் கதையும் கிட்டதட்ட மேற்சொன்ன கதைதான்… ஒரு 60 வயதான பெரியவர் 16 வயதை அடைந்த ஒர் பெண்ணை பத்து வருடமாக தன்னுடைய படகில் வைத்திருக்கிறார்.. அந்தப் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது அவளை இந்தப் படகுக்கு கொண்டு வந்து வளர்க்கத் தொடங்குகிறார்.. ஆனால் அவளை அவரது பெற்றோர் தேடிக் கொண்டிருக்கும் செய்தியும், அவளை கிழவர் கடத்தி வந்திருக்கலாம் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் கிழவர் முடிவு செய்கிறார்.. அதுவரை அவருடன் சந்தோசமாக வசித்து வந்த இந்த சிறுபெண்ணின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது.. அவளும் அந்த வயோதிகரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள்… முடிவில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்..

மேற்சொன்ன கதையிலும் நமது மேற்சொன்ன தீர்ப்பு என்னவாக இருக்கும்.. அந்தப் பெண்ணை கிழவரிடம் இருந்து பிரித்து அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்பது தானே… இந்தத் தீர்ப்பை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும்.. ஆனால் படம் பார்க்கும் போது அந்தத் தீர்ப்பை நாம் சற்றே கடினமான மனநிலையில் இருந்துதான் எடுக்க வேண்டியதாக இருக்கும் அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி..

வெகு சுருக்கமாக மேற்சொன்னதுதான் கதை வடிவம் என்று சொல்லி விட்டாலும்… வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது இத்திரைப்படம் வேறுவிதமாக காட்சி கொடுக்கும்… மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது மற்றொரு விதமாக காட்சியளிக்கும்.. இதுதான் கிம் கியின் படங்களில் இருக்கும் நுண்ணிய உணர்வு.. உதாரணத்துக்கு அந்த 60 வயது கிழவரின் கதாபாத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு 20 வயது இளைஞனை பொருத்திப் பாருங்கள்.. அவர்களுக்கு இடையே ஒரு அற்புதமான அன்பு இருக்கிறது.. ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண் அந்த இளைஞனை பிரிந்து செல்ல முடிவெடுக்கிறாள் என்கின்றபட்சத்தில் நாம் எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கும்…? எப்படியாவது அந்த இளம்பெண் அந்த 20வயது இளைஞனின் காதலை புரிந்து கொண்டு அந்த இளைஞனுடன் இணைய வேண்டும் என்றல்லவா நம் மனம் அலைபாயும்… ஆக இங்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட அன்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.. என்ன மாறி இருக்கிறது..? அன்பு அப்படியே தான் இருக்கிறது… மாறி இருப்பது வயதுதான்… 60 வயது கிழவனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு, 20 வயது இளைஞனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு… முதலாவதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நம் மனம்… இரண்டாவதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.. ஆக அன்பு, காதல் எதுவாக இருந்தாலும் அதையும் சரி தவறென நிர்ணயிப்பது வயதை பொருத்துத்தான் என்று நம்மை அறியாமலே நமக்குள் இட்டுக் கொண்ட ஒரு வரையறை நம்மை கேள்வி கேட்கும் இடமாக இத்திரைப்படம் மாறி நிற்கிறது…

ஒரு கிழவனின் காமப்பசிக்கு ஒரு சிறுமியை பலியாக்குவதா என்ற கேள்வி எழும்.. ஆனால் அதே நேரத்தில் அந்த சிறுமியை காமத்தின் பொருளாக பாவிப்பது அந்த கிழவர் அல்ல.. வெளிப்புறத்தில் இருந்து மீன்பிடிக்க வந்து, அங்கு அந்த சிறுமிக்காக கழிவிரக்கம் கொண்டு, ஒரு கட்டத்தில் அவளையே அடைய முற்பட்டு தோற்கும் வெளிப்புற மாந்தர்கள்தான், அவளை அப்படிப் பார்ப்பது என்பதை தெளிவுபடுத்தும் காட்சிகளும் உண்டு.. அவர்கள் இருவருக்கு இடையே குறிப்பாக அந்த கிழவருக்கு அந்தப் பெண்ணின் மீது உடல் சார்ந்த இச்சைகள் இல்லை என்பதை… அவர் அந்த சிறுபெண்ணை குளிக்க வைக்கும் காட்சியிலும், இரவில் அவரது கை அவளது படுக்கையை நோக்கிச் செல்லும் காட்சியிலும் மிக அற்புதமாக விளக்கியிருப்பார்… அப்படி இருக்க ஏன் அப்பெண்ணை திருமணம் செய்ய முயல்கிறார் என்பதற்கான தெளிவான பதில் சொல்லப்படுவதே இல்லை.. ஆனால் அதற்கு நாம் அந்த சிறுபெண் மீது இருக்கும் அளவு கடந்த பாசம், தன் வாழ்க்கையை தனியாக கடத்த வேண்டிய தனிமை என்னும் துயரத்தை எதிர்கொள்ள சக்தி இல்லாதது என பரிசுத்தமான எத்தனையோ காரணங்களை அடுக்க முடியும்… இதில் எதை வேண்டுமானாலும் அச்சிறுபெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான காரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்..

அதே போல் கிழவரின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் இருந்தாளா..? என்பதற்கான பதிலே படத்தில் இல்லை.. ஆனால் தங்களுக்கென தனியான குடும்பம் இருந்தும், மனைவி இருந்தும், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க கடலுக்குள் வரும் அந்த மனிதர்களுக்கு அங்கும் ஒரு பெண் தேவைப்படும் போது, பெண் வாடையே இல்லாமல் இருந்த ஒரு கிழவர் தன்னோடு ஒரு பெண் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இருக்கும் தர்க்க நியாயமும் நம்மை கேள்வி கேட்கக் கூடும்..

இதுவொரு கோணம்.. இன்னொரு கோணத்தில் இதை பழமைவாதத்துக்கும் நவீனத்துக்குமான போராட்டமாக கொள்ள முடியும்.. ஆரம்பக்காட்சியில் கடலின் அலையில் அலைகழிக்கப்படும் ஒரு பெரிய படகும் ஒரு சிறிய படகும் காட்சிக்கு கிடைக்கும்.. அதை அந்த கிழவருக்கும், அச்சிறு பெண்ணுக்குமான மெட்டஃபராக கொள்ளலாம்… அந்தக் கடலை ஒர் உலகமாகவும், அந்த படகை ஆபத்தில்லாத பழமைவாத கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டையாகவும் கொண்டாள் நமக்கு வேறொரு கதை கிடைக்கும்… பழமைவாதத்தில் மூழ்கிய அந்தப் பெரியவர், அப்பெண்ணை புறவுலகின் மீது கொண்ட பயத்தால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழப் பழக்குவதும், வேறெங்கும் செல்ல அனுமதிக்காததும், அவளை பாதுகாப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு செயல்படுவதும், அவள் நவீனயுக இசைக் கருவியை ரசிப்பதை கண்டு கொதிப்பதுமாக பெண்ணை அடிமைப்படுத்தும் விதமான செயல்பாடுகளை அவரது செயல்களில் காண முடியும்..

அதற்கு விடையாக எல்லா நேரமும் பெண்ணை ஆணே பாதுகாக்க முடியாது என்பதும், அவளுக்கே அவளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைவிட தேவைப்பட்டால் அவள் ஆணையும் காப்பாற்றுவாள் என்பதும், தொடுதலின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவள் அறிந்திருக்கிறாள் என்பதும், தன் விருப்பம் இல்லாமல் தனக்கு பிடித்தவனைக் கூட அவள் அவளது உடலை தொட அனுமதிப்பது இல்லை என்பதும், திருமணம் மற்றும் பழமைவாதத்தின் கட்டுப்பாடுகள் ஆணையும் பெண்ணையும் கட்டி வைத்திருக்கின்றன என்பதை சொல்லுவதற்காக சேவல், மற்றும் கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதும், நவீனயுகத்தின் குறியீடாக வரும் அந்த இளைஞன், கட்டி வைக்கப்பட்டு இருக்கும் சேவலின் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும், இறுதியில் காமத்தின் அனுபவத்தையும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து, அவளை கட்டுப்பாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளியே செல்ல அனுமதிப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழமைவாத கடவுளின் குறியீடுகள் கொண்ட அந்தப் பெரிய படகு மூழ்குவதும், சிறிய படகு மட்டும் தனியாக ஜலத்தில் பயணித்துச் செல்வதையும் நவீனயுகம் பழமைவாதத்தை மூழ்கடித்து தனித்து இயங்கிக் கொண்டிருப்பதற்கான குறீயீடாகக் கொள்ளலாம்..

மேலும் ஒரு பெண் ஒரு ஆணை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால், அவள் எந்த எல்லை வரைக்கும் செல்லத் துணிந்துவிடுவாள் என்பதற்கும் உதாரணமான பல காட்சிகள் படத்தில் உண்டு..

இன்னொரு கோணம் என்பது BOW வின் கோணம்.. அந்த வில் அம்பு என்பது ஆபத்தாக வரும் எதிரியை துளைக்கவும், இசை மீட்டி நம் மனதை துளைக்கவும், படகில் வரையப்பட்டு இருக்கும் புத்தர் படத்தை துளைத்து, தங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வதுமான முற்றிலும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கின்றது.. ஆனால் அதன் செய்கைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அதை இயக்குபவரின் மனநிலை என்பதும் உண்மை.. அதுபோலத்தான் ஒரு மனிதனின் மனமும் அவனது செயல்களும்.. முற்றிலும் நேரெதிரான புரிந்து கொள்வதற்கு கடினமான எத்தனையோ விதமான செயல்களை அவன் செய்தாலும் அதற்கு அவன் காரணம் இல்லை… அவனை இயக்குபவரின் மனநிலை என்பதான சித்தாந்தக் கொள்கையோடு இத்திரைப்படத்தை அணுக முடியும்..

அதுபோல அன்பு என்பது எதிர்பார்ப்புக்கு உரியதாக ஆகும் போது, அதில் ஏற்படும் நெருக்கமான சிக்கல்களையும், அதனால் மனிதர்களின் மனதில் ஏற்படும் கோபாவேசத்தையும் நம்மால் சில இடங்களில் உணர முடியும்.. தனக்கு பிடிக்காத மனிதர்களிடம் இருந்து தன்னை கிழவர் பாதுகாக்கும் போது, கிரீடம் போல இருக்கும் அந்தக் கிழவரின் அன்பு, தனக்கு பிடித்த ஒரு இளைஞனிடம் பழக முற்படும் போதும், பாதுகாக்கும் நோக்கோடு பெரியவர் குறுக்கிடுவதும், இப்போது அந்த அன்பு முள்கீரிடமாக மாறி அவளை வெறுப்பேற்றும் காட்சியும் மிக முக்கியமான காட்சிகள்.. கிழவரை வெறுப்பேற்றிவிட்டு தனியாக வந்து அந்தப் பெண் சிரிப்பதும், தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள போராடும் கிழவர், திருமண தேதியை திருத்த முற்படும் திருட்டுத்தனமான குணாதிசங்கள் நமக்குள் முளைவிடும் தருணங்களை நம் கண் முன் இத்திரைப்படம் நிறுத்துகிறது… மேலும் அன்புக்கான அளவீடாக வைப்பது, பிறர் அவர்களுக்கு பிடித்தது போல் நடப்பதையா..? அல்லது நமக்கு பிடித்தது போல் நடப்பதையா…? என்னும் தவிர்க்க முடியாத கேள்வியும் நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியாது..

மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒரு கோணம் இத்திரைப்படத்தில் உண்மையான கோணமாக இருக்கலாம்… அல்லது நான்காவதான முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணமும் இயக்குநரின் பார்வையில் இருக்கலாம்.. ஆனாலும் இப்படி வித்தியாசமான ஒரு மூன்று கோணங்களில் நம்மை யோசிக்க வைப்பதன் மூலமாக ஒரு நிகழ்வின் வெவ்வேறு விதமான வித்தியாசமான புரிதல்களை புரிந்துகொள்ள நம்மைத் தூண்டுவதையே இத்திரைப்படத்தின் வெற்றியாகக் கொள்ளலாம்..

கிம் கி டுக்கின் பிற படங்களைப் போல் இத்திரைப்படத்திலும் வசனங்கள் என்பது மிகமிக குறைவு.. அதிலும் குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களான அந்த கிழவரும், அச்சிறு பெண்ணும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.. ஆனால் அவர்களது உணர்வுகள் நமக்கு அப்பட்டமாக உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு… படம் முழுக்க கடலில் உள்ள ஒரு படகில் நிகழ்வது என்பதால் இதன் ஒளிப்பதிவும் ஒரு சிறப்பம்சம் விளங்கியதாக இருக்கிறது… அது போல் இசை… அந்தக் கிழவர் அந்த வில்லை ஒரு சீனப் பாரம்பரிய இசை கருவியைப் போல் மாற்றி ஒரு வித்தியாசமான இசையை பல இடங்களில் இசைத்துக் கொண்டே இருப்பார்… அந்த இசை நம் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் ஒரு அற்புதமான இசை…

தனது வாழ்க்கையை கிம் கி டுக் ஒரு ஓவியராக தொடங்கியவர் என்பதால் ஓவியம் போன்ற அற்புதமான காட்சிகள் இயல்பாகவே படத்தில் அமைந்திருக்கும்… அது போலத்தான் இசையும் மிக அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்… க்ளைமாக்ஸில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியாவிட்டாலும் கூட.. அது நம் முடிவுக்கே விடப்படுவதால்.. அது நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் அலாதியானது… கிழவராக நடித்திருக்கும் Jeon Seong-hwang-ம் Han Yeo Reum-ம் சிறு பெண்ணாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் எந்தவொரு வசனத்தின் துணையும் இன்றி மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்… கிம் கி டுக்கின் வரிசையில் இதுவும் தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம்…

Realted News

பேரரசு இயக்கத்தில்

Read More

வன்மம்

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்