Sanga Seithigal

நியாயம் வென்றது


     

               கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்றதால், தனது முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட்டின் தீர்ப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மன நிறைவு...
இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

இறைவன் அளித்த வரம்

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது. இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு.

நீதியே வெல்லும்... 

சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும். திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.

என்னை வெல்ல முடியாது... 

என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மனமார்ந்த நன்றி... 

நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதானம் தேவை... 

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும். நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.

மக்கள் நலனே என் நலன்... 

தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Realted News

கமரகட்டு திரை விமர்சனம்

Read More

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா

Read More

கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்