Cinema Seithigal

‘கருப்பன்’ விமர்சனம்

ரேணிகுண்டா என்ற வித்தியாசமான படத்தைத் தந்த பன்னீர்செல்வம், கமர்ஷியலாக இறங்கி அடிக்க கிராமத்துக் கருப்பனைக் கையில் எடுத்திருக்கிறார். கிராமத்து இளைஞன் கருப்பன். மாடு பிடி வீரன். மாடு பிடிப்பதைத் தவிர அவனுக்குத் தெரிந்த ஒரே வேலை நண்பன் சிங்கம்புலியுடன் குடித்துவிட்டு ஊரைச் சுற்றுவது.

கருப்பன் காளைகளையும், அநியாயங்களையும் கண்டால் அவ்வளவுதான். அதை அடக்கிவிட்டுதான் அடுத்த வேலை. யாரும் அடக்க முடியாத தனது காளையை அடக்கினால் தன் தங்கையைத் திருமணம் செய்து தருவதாக அவரிடம் சவால் விடுகிறார் பசுபதி. போட்டியில் விஜய் சேதுபதி ஜெயித்துவிட பசுபதி தங்கை அன்புக்கும் (தன்யா) விஜய் சேதுபதிக்கும் திருமணம். கண்பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.

வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது.

பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. காட்சிகளை உயிர்ப்புடன் நகர்த்த சக்திவேலின் ஒளிப்பதிவு உதவியுள்ளது. பாபி சிம்ஹாவிற்கு இறைவி படத்தில் கிடைத்த அதே கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி,

வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி  அம்மாவாக வரும் ரேணுகா, தான்யாவின் அண்ணியாக வரும் காவேரி, லோக்கல் கந்துவட்டி தாதா சரத் லோஹிதஸ்வா என எல்லோருமே அந்த பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.  கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்.

ரத்தம் பார்த்தே அரத பழசாய் படம் முடிந்தாலும், கருப்பன் நிறைவையும் கொண்டாட்டமான மனநிலையையும் தரத் தவறவில்லை. பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும், தியேட்டரை விட்டு வெளியேறும்போது மகிழ்வான மனநிலையுடன் செல்ல வைக்கிறார் இயக்குநர்  அதுதானே முக்கியம்!

Realted News

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!

Read More

நமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்