Cinema Seithigal

கோடிட்ட இடங்களை நிரப்புக –விமர்சனம்

        ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் பார்த்திபன். ரியல் எஸ்டேட் பிஸினஸும் சைடாக நடத்தி வருகிறார். காசு விஷயத்தில் கெட்டி. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பவர். செல்போனை டாப்அப் செய்யக்கூட நினைக்காமல் டிராவல்ஸ் வண்டி வேண்டுமென்றால் அதற்கான எண்ணாக டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளரின் நம்பரை கொடுக்கும் அளவுக்கு சமர்த்தர். அதே சமயம் படு கஞ்சர் என்று உடன் வேலை செய்பவர்களால் அழைக்கப்படுபவர். விபத்தொன்றில் சிக்கியதால் காலில் ஊனம் ஏற்பட்டதால் சற்று விந்தி, விந்திதான் நடப்பார்.

        லண்டனில் இருந்து ஒரு மிகப் பெரிய பார்ட்டியான கெவின் என்பவர் வருகிறார். கெவின் என்னும் சாந்தனு சென்னையில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்காக வந்திருக்கிறார். இங்கே சில நாட்கள் தங்கப் போகிறார். தனக்கு ஹோம்லியான இடம் வேண்டும் என்று பீல் செய்கிறார் சாந்தனு. அதற்குத் தகுந்தாற்போல் ஒரு வீடு இருப்பதாகச் சொல்லி ஒரு புத்தம் புதிய பங்களாவுக்கு அவரை அழைத்துச் செல்கிறார் பார்த்திபன்.

        அந்த வீட்டைப் பார்க்கும் சாந்தனுவுக்கு வீடு பிடித்துப் போகவே அங்கேயே தங்குவதற்கு ஒத்துக் கொள்கிறார். அதே வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி நாயரை பார்த்தவுடன் சாந்தனுவுக்குப் பிடிக்கிறது. பார்வதி மீது மோகம் கொள்ளும் அளவுக்கு பார்வதியின் நடவடிக்கைகளும் அமைய, நிஜமாகவே சாந்தனுவுக்கு பார்வதி மீது ஒரு கண் விழுகிறது.

        இந்த நேரத்தில்தான் பார்வதி தன் மனைவி என்கிறார் பார்த்திபன். இதனை எதிர்பார்க்காத சாந்தனு அதிர்ச்சியானாலும் சமாளித்துக் கொள்கிறார்.

        பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.

        மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனுவுக்கு பார்வதி மீது பரிதாபம் ஏற்படுகிறது.

        இந்த நேரத்தில் ஒரு நாள் பார்வதியை சாந்தனு கட்டிப் பிடிக்க.. அவர்களிடையே உடல் உறவுவரையிலும் கொண்டு போய்விடுகிறது. இதனை பார்த்திபனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் இருவரும். சாந்தனுவும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஹோட்டலுக்கு வந்து குடியேறுகிறார்.

        அடுத்து தான் சென்னைக்கு வந்த வேலையான மிகப் பெரிய இடத்தை விலை பேசும் சாந்தனுவுக்கு புரோக்கராக நடுவில் இருந்து அந்தப் பிரச்சினையை முடித்துக் கொடுக்கிறார் பார்த்திபன். இதற்காக பார்த்திபனுக்கு புரோக்கர் கமிஷனாக மிகப் பெரிய தொகை கிடைக்கிறது. “இதனை வைத்து 4, 5 கார்களை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைத்துக் கொள்வேன்…” என்கிறார் பார்த்திபன். சாந்தனுவோ, லண்டனுக்கு பார்வதியையும் அழைத்துச் செல்ல நினைக்கிறார். அதற்கான சூழல் வருமென்று நம்புகிறார்.

        இறுதியில் என்ன ஆனது..? சாந்தனு தான் நினைத்தபடியே பார்வதியை அழைத்துச் சென்றாரா..? பார்த்திபன் கதி என்ன..? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய விஷயங்கள்.

        இந்தப் படத்தின் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டுக்காக இந்தப் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிட முடியாமல் இருப்பதுதான் படத்தின் புதுமை.

        திரைக்கதையின் போக்கில் போகப் போக.. ஒரு இயல்புத் தன்மையுடன் கதை நகர்வதைப் பார்க்கும்போதே வயிற்றுக்குள் கலவரத்தை உண்டு செய்கிறது. இந்த உணர்வை தோற்றவித்திருப்பது பார்த்திபனின் அழகான இயக்கம்.

        ஒவ்வொரு வசனத்திலும் ஒரு அர்த்தம்.. ஏனோதானோவென்று ஒரு வசனம்கூட படத்தில் இடம் பெறவில்லை. அத்தனைக்கும் ஒரு காரணமிருக்கிறது. ச்சும்மாவே மேடைப் பேச்சில் சிலேடையில் பின்னுவார் பார்த்திபன். படத்தில் வாய்ப்பு கிடைத்தால் ச்சும்மா விடுவாரா என்ன…? இங்கே ஒரு கோலாட்டமே ஆடியிருக்கிறார் பார்த்திபன். பாராட்டுக்கள் ஸார்..!

        நடிப்பென்று பார்த்தால் சாந்தனுவுக்கு முதல் படம் இதுதான் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு அழுத்தமாக அவரை நடிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். அவர் மட்டுமல்ல.. பார்வதி நாயருக்கும்கூடத்தான்

        அழுத்தமான வசன உச்சரிப்பு, குளோஸப் காட்சிகளில் தெரியும் முக பாவனைகள்.. செமத்தியான நடனம்.. என பலவித்த்திலும் ஒரு ரியல் ஹீரோவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் சாந்தனு. இனிமேல் இதைவிட கனமான கதாபாத்திரங்களை இவரால் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கையை இயக்குநர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்..!

        ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ராசியினால் தம்பி ராமையாவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘மறதி’ என்னும் தேசிய வியாதியை தனக்குள் வைத்துக் கொண்டு பல மறதிகளால் வாழ்க்கையைத் தொலைத்து, வேலையையும் தொலைத்து கடைசியாக பார்த்திபனிடம் வடிவேலுக்கு அடுத்து மாத்து வாங்கும் வேலையைச் செய்து உச்சு கொட்ட வைத்திருக்கிறார் தம்பி ராமையா.

        அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படத் தொகுப்பாளரும் தனது பணியை பார்த்திபன் பாணியில் செய்திருக்கிறார்.

Realted News

பாராட்டு விழா..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்