National Award Winners

???????????

இந்திப் பட உலகில் வணிக சினிமா இயக்குநராக அறியப்பட்ட பிரியதர்ஷன் வணிக சினிமாவின் நிர்பந்தங்களிலிருந்து விடுபட்டு எடுத்திருக்கும் படம் காஞ்சிவரம். பட்டுத் துணி நெய்வதற்குப் பேர்போன காஞ்சிபுரத்தில் 1930களில் நடந்த கதையைச் சொல்லும் படம் இது. இரண்டாம் உலகப் போர், மகாத்மா காந்தி கொலை, காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உதயம் என்பன போன்ற வரலாற்றுரீதியான சில நிகழ்வுகள் திரைக்கதையில் இடம்பெற்றாலும் அடிப்படையில் இது ஒரு புனைவுதான். 1930களில் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற உண்மையைச் சொல்ல முனையும் புனைவு.

நெசவாளர்களின் வறுமை படத்தின் அடிநாதம். அதிகாரத்தில் இருப்பவர்களின் சுரண்டல் அந்த வறுமையின் ஆதாரம். என் மகள் கல்யாணத்திற்குப் பட்டுச் சேலை வாங்கித் தருவேன் என்று ஒரு நெசவாளர் சொல்லும்போது ஊரே சிரிக்கிறது. இதுதான் நெசவாளர்கள் வாழ்வின் யதார்த்தம் என்பதை இந்தக் காட்சியில் அழுத்தமாகக் காட்டுகிறார் பிரியதர்ஷன். கலைத் திறனும் கைத்திறனும் அற்புதமாக இழையும் அவர்களது திறமைக்கு உரிய கூலியோ அங்கீகாரமோ கிடைக்காத சோகத்தையும் காட்சிப்படுத்துகிறார்.

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் வேங்கடத்தின் (பிரகாஷ்ராஜ்) மகள் (ஷம்மு) உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். காவலர் சகிதம் அவளைப் பார்த்துவர இரண்டு நாள் பெயிலில் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கிறது. கடும் மழையில் பேருந்து புறப்படுகிறது. மழையும் காற்றும் சில வேடிக்கைச் சம்பவங்களும் சேர்ந்து அந்தப் பயணத்தைத் தாமதப்படுத்துகின்றன. பயணத்தினூடே வேங்கடத்தின் நினைவுகளின் வழி விரிகிறது அவரது கதை.

சுரண்டலுக்கும் வறுமைக்கும் ஆளாகிய நெசவாளர்களில் ஒருவன் வேங்கடம். தன் மகளுக்குத் திருமணப் பரிசாகப் பட்டுப் புடவை எடுத்துத்தர வேண்டும் என்பது அவன் கனவு. அவனது சகதொழிலாளர்கள் அனைவரும் அதைக் கேட்டுச் சிரிக்கும் அளவு சாத்தியமற்ற கனவு. அதற்காக அவன் சேர்த்துவைக்கும் பணம் அவன் தங்கைக்காகச் செலவாகிவிடுகிறது. வேறு வழியில்லாமல் அவன் பட்டு நூல்களைத் தவணை முறையில் திருடி யாருக்கும் தெரியாமல் புடவை நெய்துவருகிறான். அவன் மனைவி (ஸ்ரேயா ரெட்டி) சிறிய வயதிலேயே கூட்டத்தில் மிதிபட்டு உடல் நலம் குன்றி இறந்துபோகிறாள்.

மகள் (ஷம்மு) வளர்கிறாள். புடவையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. வேங்கடத்தின் போராட்டத்திற்கு இணைகோடாக நெசவாளர்களின் வாழ்வில் உள்ளூர் ஜமீன்தார் ஏற்படுத்தும் தாக்கம் சொல்லப்படுகிறது. சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கச் சொல்லித்தருகிறார் அந்த ஊருக்கு வரும் ஒரு கம்யூனிஸ்ட். போராட்டக் களத்தில் வேங்கடம் முன்னணியில் நிற்கிறான். கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்கிறார்கள் நெசவாளர்கள். இதற்கிடையில் வேங்கடத்தின் மகளுக்கும் நண்பனின் மகனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அதற்குள் புடவையை நெய்து முடித்துவிட வேண்டும் என்னும் ஆதங்கத்தில் வேலை நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டு வேலைக்குத் திரும்பச் சம்மதிக்கிறான் வேங்கடம். ஆனால் காரியம் முடிவதற்குள் கையும் களவுமாகப் பிடிபட்டுவிடுகிறான். தொழிலாளர்களின் துரோகியாகவும் திருடனாகவும் அறியப்பட்டுச் சிறைக்குச் செல்கிறான்.

சுரண்டலின் கொடுமையையும் அன்பின் இதத்தையும் சமமான ஈடுபாட்டுடன் காட்ட முயல்கிறார் பிரியதர்ஷன். நெசவாளர்களின் வாழ்க்கை முறையை இயல்பாகக் காட்சிப்படுத்துகிறார். வறுமையையும் சுரண்டலையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும் நெசவாளர்கள் விழிப்புணர்வு பெற்றுப் போராட்டத்தில் ஈடுபடுவதும் நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்பட்டுள்ளது.

வேங்கடத்தின் கதையினூடே நெசவாளர்களின் வாழ்வைக் காட்ட முனைந்திருப்பதுதான் படத்தின் பலவீனம். வேங்கடத்தின் பிரச்சினை சராசரி நெசவாளர்களின் பிரச்சினை அல்ல. நெசவாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலிருந்து பிறப்பதும் அல்ல. நடைமுறை சாத்தியமற்ற ஒரு கனவு, அதற்கு முறை தவறிய ஒரு தீர்வு என்பதுதான் அவன் பிரச்சினை. அதோடும் அதை ஒட்டிய சோகங்களோடும் பார்வையாளர்கள் உறவுகொள்வது இயலாததாகிறது. நெசவாளர்களின் கஷ்டம்தான் வேங்கடத்தைத் திருடனாக்கியது என்று சொல்ல முடியாது. இந்தக் கஷ்டம் எந்தத் தொழிலிலும் எந்தச் சூழலிலும் ஏற்படக்கூடியது. சுரண்டலும் வறுமையும் மூன்றாம் உலக நாடுகளின் யதார்த்தம். வேங்கடம் படும் கஷ்டங்கள் நெசவாளர் என்ற குறிப்பான நிலையிலிருந்து எழுபவை அல்ல.

பிரியதர்ஷன் யாருடைய கதையைக் கூற முயல்கிறார்? நெசவாளர்களின் கதையையா அல்லது வேங்கடம் என்னும் தனிமனிதனின் கதையையா? இரண்டும் ஊடுபாவாக இழையும் ஒரு கதையைக் கூறுவது அவரது நோக்கமாக இருக்கலாம். ஆனால் இரண்டையும் அவர் சித்தரிக்கும் விதம் அந்த நோக்கத்தைப் பலவீனப்படுத்துகிறது. நெசவாளர்களின் சுரண்டலைச் சொல்லும் காட்சிகள் தட்டையான வணிக சினிமாவின் சூத்திரங்களுக்கு உட்பட்டவை. வேங்கடத்தின் பிரச்சினைகளும் வழமையான மிகு உணர்ச்சிப் படங்களின் கட்டமைப்பைக் கொண்டவை. ‘வாழாவெட்டி’யாக வரும் தங்கை, மனைவிக்கு ஏற்படும் பிரச்சினை என்று அவன் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் பல படங்களில் நாம் பார்த்துச் சலித்தவைதாம். பிரியன் புளித்துப்போன வகைமாதிரி பிம்பங்களின் மூலம் ஒரு காலகட்டத்து வாழ்க்கையையும் ஒரு தொழில் சமூகத்தையும் சித்தரிக்க முயல்கிறார். பேராசைக்காகத் திருட முனையும் ஒரு மனிதனின் பாத்திரத்தை அதில் மையமாக அமைக்கிறார். படம் நெசவாளர்களைப் பற்றியதாகவும் இல்லாமல் வேங்கடத்தைப் பற்றியதாகவும் இல்லாமல் வலுவிழந்து நிற்கிறது. நெசவாளர்களின் பிரச்சினையோ வேங்கடத்தின் பிரச்சினையோ மனத்தைத் தொடத் தவறுகிறது. மாறாக, கொட்டும் மழையினூடே நிகழும் பேருந்துப் பயணம் மனத்தில் நிற்கிறது.

வேங்கடத்தின் வாழ்வைச் சித்தரிக்க முனையும் பிரகாஷ்ராஜின் முயற்சியைக் குறை சொல்ல முடியாது. தொடக்கக் காட்சிகளில் உழைப்பு, வறுமை, பதற்றம், அப்பாவித்தனம், திருடும்போது ஏற்படும் பயம் ஆகியவற்றை நன்றாகவே வெளிப்படுத்துகிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் பாத்திரத்தைவிடப் பிரகாஷ்ராஜ் என்னும் நடிகனின் பிம்பமே நம் கவனத்தில் அழுத்தம் பெறுகிறது. அந்தப் பாத்திரம் வகைமாதிரித் தன்மைக்குள் விழுவதால் இப்படி நேர்கிறதா அல்லது பாத்திர வார்ப்புக்குள் நடிகனின் உருமாற்றம் முழுமை பெறாமல்போவதால் இப்படி நேர்கிறதா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

பிற நடிகர்களில், பாத்திரத்தோடு ஒன்றிப்போகும் ஸ்ரேயா ரெட்டியின் பேசும் விழிகளும் துள்ளாட்டமாய்த் தொடங்கிப் பிறகு முடங்கிப்போகும் ஷம்முவின் உடல் மொழியும் மனத்தில் நிற்கின்றன. வேங்கடத்தின் நண்பனாக வரும் நடிகரும் தொப்பியின் இலச்சினை அறுந்துவிடுவதால் பதற்றமடையும் போலீஸ்காரரும் நம்பகத்தன்மையோடு வெளிப்படுகிறார்கள். திருவின் ஒளிப்பதிவு படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. யதார்த்தமான வண்ணங்கள், அழகான கோணங்கள் என்று பொருத்தமாக அமைந்திருக்கிறது ஒளிப்பதிவு. அர்த்தமுள்ள மௌனங்கள் கொண்ட ஸ்ரீகுமாரின் பொருத்தமான பின்னணி இசையும் படத்திற்கு வலுச் சேர்க்கிறது. சாபு சிரிலின் கலை வண்ணம் அந்தக் காலத்து உணர்வை இயல்பாக உருவாக்குகிறது.

ஒளியையும் இருளையும் பயன்படுத்தும் விதம், சற்றே மெதுவான கதை கூறல் முறை, காட்சிப் படிமங்கள் மூலம் கதையை நகர்த்தும் முயற்சி முதலான சில அம்சங்களைக் ‘காஞ்சிவரம்’ கொண்டிருந்தாலும் அது கலைப் படைப்புக்கான ஆழத்தையோ தீவிரத்தையோ கொண்டிருக்கவில்லை. வணிகச் சமன்பாடுகளுக்குட்பட்டுப் படம் எடுத்துப் பழக்கப்பட்டவர்கள் அதைத் தாண்டிப் படம் எடுக்கும்போது, கலை சார்ந்த அடையாளங்களையே கலை என்று எண்ணி மயங்குவது ஆச்சரியமானதல்ல. பிரியதர்ஷனின் காஞ்சிவரத்துக்கு நேர்ந்திருப்பது இத்தகைய விபத்து தான். தீவிரமான ஒரு விஷயத்தை வணிக சினிமாவின் எல்லைகளைத் தாண்டிக் கையாள முனையும் பிரியனின் படம், அவருக்குப் பழக்கமானதும் ஆகிவந்ததுமான பாதையைவிட்டு அவர் பெரிதாக முன்னகர முடியாமல் இருப்பதைக் காட்டுகிறது.

சமூக அக்கறை சார்ந்த கலைப் படைப்புகள் அசலான கலை வேட்கையிலிருந்தும் ஆழமான அக்கறையிலிருந்தும் தீர்க்கமான புரிதலிலிருந்தும் பிறப்பவை. இதற்கு அப்பாற்பட்ட அம்சங்களிலிருந்து முளைவிடும் முயற்சிகள் மேலான கலைப் படைப்புகளின் அடையாளங்களை மட்டுமே கொண்டிருக்கும். பிரியதர்ஷனின் படத்தில் உள்ள வகைமாதிரிப் படிமங்களையும் எரிச்சலூட்டும் மிகு உணர்ச்சிச் சித்திரங்களையும் பார்க்கும்போது ‘காஞ்சிவரம்’ படத்திற்கான அவரது உத்வேகம் எது என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன. 

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்